சிறுகதையாற்றுப்படை
சிறுகதை -01
7.1.2026 நாளிட்ட ஆனந்த விகடன் இதழில் இக்கதை வெளிவந்தது. ஆனந்த விகடன் நூற்றாண்டு இதழில் வெளிவந்த முதல் கதை இது. கதையின் பெயர் மனிதம். எழுதியவர் அசோக்குமார். இக்கதைக்கு பிரேம் டாவின்சி ஓவியம் வரைந்திருந்தார். ஓவியம் செயற்கை மனிதர்களைக் கொண்டிருந்தது.
கணினி முன் மில்லி செகண்ட், நிமிடம், மணி ஓடிக்கொண்டிருந்தன. இந்த ஓவியத்தைப் பார்க்கும் யாருக்கும் இக்கதை அறிவியல் புனைவு என்றே நினைக்கத் தோன்றும். அப்படியாகவே எனக்கும் தோன்றியது.
மரணத்தை நினைத்து கலக்கமாக இல்லையா? அம்மா அனி வினவுகிறார். வாழ்வதற்கே கலக்கம் இருக்கும். மரணிக்க என்ன பயம்? என்று புன்னகைக்க முயல்கிறான் நியான். உனது வாழ்வை அபகரித்த குற்ற உணர்வு எங்களை நிம்மதியாக இருக்க விடாது என்கிறார் தந்தை லியோ.
கதையின் தொடக்கத்தில் மூவருக்குமிடையே நடந்தேறும் உரையாடல்தான் பெருங்கதையாக விரிகிறது.
செயற்கை மனிதர்களின் வாழ்நாட்களை அவர்களுக்கும் மேலுள்ள மனிதர்கள் தீர்மானிக்கிறார்கள். இதன்படி தாய், தந்தை இருவரின் வாழ்நாட்கள் குறைந்துகொண்டே வருகிறது. இப்பொழுது மகன் நியான் மேலிடத்திற்கு மனு செய்கிறான். எனது வாழ்நாட்களில் பாதியை தந்தைக்கும் தாய்க்கும் வழங்குகிறேன். எனது மனுவின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கேட்கிறான். இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டால் மற்றவர்களும் இதை கோரிக்கையை வைக்க முன் வருவார்கள் என்று மேலிடம் பயப்படுகிறது. தன் வாழ்நாட்களைப் பிறருக்கு வழங்க யார்தான் முன் வருவார்கள்? எனது கோரிக்கை பரிசீலிக்க வேண்டும் என்கிறான் நியான். மேலிட அலுவலர்கள் நியானின் கோரிக்கையை வாக்கெடுப்புக்கு விடுகிறார்கள். வாக்கெடுப்பில் பெரும்பான்மை நியானுக்கு ஆதரவாக வாக்களிக்க நியானின் வயதில் பாதியை அப்பா, அம்மாவுக்குச் செல்ல பிறகு கொஞ்சக்காலம் மூவரும் வாழ்கிறார்கள். ஒரு நாள் நியானின் வாழ்நாள் அப்பா, அமமாவுக்கு முன்னதாக முடிந்துவிடுகிறது. இப்பொழுது அப்பா, லியோ, அம்மா அனி கவலைக்கோலத்தில் உள்ளார்கள். அவனது இறுதிக்காலம் இரண்டு மணி நேரம் என்கிற அளவிலேயே உள்ளது. அவனது உடலை ஏற்றிச்செல்ல வாகனம் வந்துவிட்டது. அவனும் சென்று அந்த வாகனத்தில் படத்துக்கொண்டான்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஊடகன் தனது வயதில் ஒரு நாளை நியானுக்குக் கொடுக்கிறான். அவனைப் போலவே பலரும் கொடுக்கிறார்கள். நியானின் இறுதி காலம் ஐந்து, நான்கு, இரண்டு என்று குறைந்துகொண்டே வந்து திடீரென்று மெஷின் அணைந்துபோய் திரும்ப இருபத்து நான்கு மணி நேரத்தைக் காட்டுகிறது.
நியான் உயிர்பெற்று அப்பா , அம்மாவைக்கட்டிப் பிடித்துக்கொள்கிறான். இந்தக் கதை மானிடோ எனும் நகரில் ஸ்க்ராம்பிளர் எனும் தொழிற்நுட்பத்தில் நடைபெறுகிறது. இக்கதை இவ்வாறாக முடிகிறது. வாழ்வு விதிகளால் ஆளப்படுவதில்லை. விருப்பங்களால் ஆளப்படுகிறது.
இக்கதையில் நான் தர்க்கம் பார்க்கவில்லை. சற்றே வித்தியாசமான அறிவியல் புனைவு என்பதாக பார்த்தேன். வாசிப்பதற்கு புதிய அனுபவத்தைத் தந்தது. இந்தக் கதைக்கு ஒரு வாசகர் இப்படியாக ஒரு விமர்சனத்தை எழுதியிருந்தார். இந்த விமர்சனத்தை வாசிக்கையில் ஒரு சிறுகதையாளன் எவ்வளவு கவனமாக கதை எழுத வேண்டும் என்பதை நினைவூட்டியது.
விமர்சனம்-
ஒரு அறிவியல் புனைகதை (Sci-Fi) அல்லது டிஸ்டோபியன் கதை எழுதும்போது, அந்த உலகின் விதிகள் (Logic) மிகத் துல்லியமாக இருக்க வேண்டும்.
1. வயதுக் கணக்கு இடிக்கிறதே!
* மொத்த ஆயுள் வரம்பு = 40 வயது.
* மகனின் வயது = 26.
* அவன் தன் மீதமுள்ள 14 வருடங்களை (40-26=14), அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தலா 7 வருடங்களாகப் பிரிக்கிறான்.
* அப்படிப் பார்த்தால் கூட அவர்கள் இப்பொழுது 40 வயதை நெருங்கி இருக்க வேண்டும்
* 14 வயதில் அவர்கள் பெற்றோராகி இருக்க முடியுமா? இது உயிரியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் மிகப்பெரிய பிழை.
2. பிரிவின் வலி தீருமா?
ஆயுளைப் பிரித்துக் கொடுத்தாலும், யாரோ ஒருவர் முன்னரோ பின்னரோ இறக்கத்தான் போகிறார்கள். "நாங்கள் மூவரும் ஒரே நாளில் இறக்க வேண்டும்" என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவன் ஆயுளைக் கொடுப்பதாலேயே அந்தப் பிரிவுத் துயரம் நீங்கிவிடாது. வலி அப்படியேதான் இருக்கும்.
எனது பார்வை:
எழுத்தாளர் 'தியாகம்' மற்றும் 'செண்டிமெண்ட்' என்ற உணர்வை மையப்படுத்தி எழுத நினைத்திருக்கிறார். ஆனால், அந்த உணர்வை கடத்துவதற்குத் தேவையான தர்க்கரீதியான அடித்தளத்தை (Foundation) அமைக்கத் தவறிவிட்டார்.
விகடனின் தரம் இப்பொழுது இப்படித்தான் இருக்கிறது. விகடனுக்கு குறைந்த கதைகள் வருகிறது என்றால் அவர்கள் அதை சரி செய்து எழுத்தாளரின் அனுமதியோடு பதிவிடலாம் இப்படி மேலோட்டமாக தர்க்க ரீதியான பிரச்சினைகள் நிறைந்த அடிப்படையே பிரச்சினையாக இருக்கிற கதைகளை,இன்னும் கூட சொல்ல வேண்டும் என்றால் இந்த கதையின் தேவையே இல்லை. நோக்கமே அற்ற கதை இது.
########
சிறுகதை -03
ஆனந்த விகடன் 21.1.26 நாளிட்ட இதழில் த. குணசுந்தரி எழுதிய சிறுகதை நீட்சிக்கோடுகள். இந்தத் தலைப்பு எனக்குப் பரிச்சயமானதுதான். நான் எழுதிய ஒரு குறுநாவலுக்கு நிலநடுக்கோடு என்று பெயர் வைத்தேன். அந்தப் பெயரில் விட்டல்ராவ் ஒரு நாவல் எழுதியிருந்தார். பிறகு நீட்சிக்கோடு என்று பெயர் வைத்தேன். இக்கோடு ஒன்றின் தொடர்ச்சி என்பதால் நான் எழுதிய இக்கதைக்கு பொருத்தமில்லாத தலைப்பு என்று கருதி நீளநடுக்கோடு என்று பெயர் மாற்றினேன். இந்த குறுநாவல் ஸீரோ டிகிரி நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்களைத் தேர்ந்தெடுத்து நூலாக்கியதில் முதல் நாவலாக இடம் பெற்றது.
கொரானா ஊரடங்கு காலத்தில் பாலைவன நாட்டில் ஓர் இந்தியன், ஒரு பாகிஸ்தானி, ஓர் இஸ்ரேலியன், ஒரு பாலஸ்தானி நால்வரும் ஒரே அறையில் அடைக்கப்படுவதுதான் கதை. நால்வரும் ஒருவருக்கொருவர் எதிரிகள். இவர்கள் எப்படியாக ஒவ்வொரு நாட்களையும் கடத்துகிறார்கள், அவர்களுக்குள் நிகழும் உரையாடலே இந்நாவல்.
இக்கதையை இங்கு நான் சொல்வதற்கு காரணம் நீளநடுக்கோடு, நீட்சிக்கோட்டிலிருந்து எப்படியாக வேறுபடுகிறது என்பதைச் சொல்வதற்காக.
நீட்சிக்கோடுகள் தலைப்பைப் பார்த்தேன். கோடுகளாக அதன் எழுத்து இருந்தது. தலைப்பில் மூன்று புள்ளிகள். இந்தப் புள்ளிகள் பெண்ணின் நெற்றிப் பொட்டை நினைவுபடுத்தின. கதைக்கு கோ.ராமமூர்த்தி ஓவியம் தீட்டியிருந்தார். இரண்டு ஓவியங்கள். முதல் ஓவியம் காவல்துறை சீருடை அணிந்த ஒரு பெண்ணின் கையிலிருக்கும் ஒரு குழந்தையைத் தாவிப்பிடிக்க அவ்வளவாக அழகில்லாத ஒரு இளம்பெண் கையை ஏந்துகிறாள். அருகிலுள்ள பாதி உருவத்தில் தடித்த மீசையுடன் கூடிய ஓர் ஆண் காவலர். பின்புறம் ரயில்பெட்டி. நடுவயதைத் தாண்டிய ஒரு தாய் ரயிலில் ஏறுகிறாள். பெண் காவலர் கையில் வைத்திருக்கும் குழந்தை அழுதுகொண்டிருக்கிறது. கீழே ஒரு பை திறந்திருந்திருக்கிறது.
இரண்டாவது ஓவியத்தில் ஒரு பேருந்து. ஜன்னலோரம் அழகான சுடிதார் அணிந்த ஒரு பெண். பின்னலிட்ட ஜடை முன்னே கிடக்கிறது. ஜன்னலோரம் ஒரு அலுவலப்பை. கையில் ஒரு கோப்பு. அவளுக்கும் அருகில் முந்தைய ஓவியத்திலிருந்த இளம் வயது தாய் மடியில் குழந்தையுடன் ஒரு கையில் அலைபேசியுடன் அதைப் பார்த்தவளாய் அமர்ந்திருக்கிறாள். பின்புறம் இரண்டு ஆடவர்களின் முகம் தெரிகிறது.
கதையை வாசிப்பதற்கும் முன்னே இரண்டு ஓவியங்களையும் மனத்திற்குள் ஏற்றி இந்தத் கதை எப்படியாக இருக்குமென்று மனதிற்குள் அலசினேன். முதல் ஓவியம் ஓர் இளம்பெண் எங்கேயிருந்தோ ஒரு குழந்தையைத் திருடி வருவதாகவும் அதைக் காவலர்கள் கைப்பற்றி விட்டதாகவும் ஊகித்தேன். இரண்டாவது ஓவியம் அந்தக் குழந்தையை மீட்டு ரயிலில் பயணம் செய்வதாகவும் அவளுக்கு ஒரு பெண் உதவியதாகவும் ஊகித்தேன்.
எனது இரண்டு ஊகிப்பில் முன்னது சரி, பின்னது தவறு. சரி. த.குணசுந்தரி எனும் எழுத்தாளரை இதற்கு முன்பு நான் அறிந்திருக்கவில்லை. இவரது கதையை நான் முதல் முறையாக வாசிக்கப்போகிறேன் என்கிற மன உந்துதலோடு கதையை வாசிக்கத்தொடங்கினேன். பெண் எழுத்தாளர் எழுதும் கதைகளில் கடைசி பத்தி அல்லது வரி அல்லது சொல்லில் அதிர்வு , அதிர்ச்சி , வியப்பு இருக்கும் என்கிற புரிதலோடு வாசிப்பைத் தொடங்கினேன்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் கதை தொடங்குகிறது. ஒரு அரசுப் பேருந்தில் பலரும் முண்டியடித்து ஏறுகிறார்கள். இலவசமாக பெண்கள் பயணம் செய்யும் பதினாறாம் எண் பேருந்து அது. சுதா எனும் இளவயது பெண் அவ்வளவு கூட்டத்தில் முண்டியடித்து ஏறி குழந்தையுடன் ஏறும் தாய்க்கு, இங்கே வாங்க...இங்கே வாங்க என்று இடம் பிடித்துக் கொடுக்கிறாள். அந்தத் தாய் கூட்டத்தை விலக்கி அந்த இடத்தை அடைகிறாள். எப்படியென்றால் காய்கறிக்கூடையின் ஓட்டையிலிருந்து பிதுங்கித் தப்பி விழுந்த பழம் போல. இந்த உவமை கதைக்குப் பொருத்தமாக இருந்தது.
சுதா தாயின் கையில் வைத்திருக்கும் குழந்தையைப் பார்க்கிறாள். தாயைப் பார்க்கிறாள். குழந்தையை அவள் அலட்சியமாக வைத்திருப்பது சுதாவுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது. குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. குழந்தையை அந்தத் தாய் திட்டுகிறாள். குழந்தை தலையைத் தூக்கி அருகில் அமர்ந்திருக்கும் சுதாவின் வலக்கை முட்டிக்கும் மேலே சப்புகிறது.
தாய் யாருடனோ போனில் சண்டையிடுகிறாள். யாருமில்லை அவளது கணவர்தான்.
கதை நினைவு பகுதிக்குச் செல்கிறது. தன்பாத்திலிருந்து சென்னை வழியே ஆலப்புழா செல்லும் ரயில் அது. குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. குழந்தைக்கு மாற்ற டயாப்பர் இல்லை. குழந்தைக்குத் தொட்டில் கட்ட சேலை இல்லை. ஏழு மணி நேரம் பயணத்தில் அந்தக் குழந்தைக்கு அவள் பால் கொடுக்கவில்லை. மூன்று மாதக் குழந்தைக்கு டீ ஆற்றி கொடுக்கிறாள். அவளுக்கும் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு நடுத்தர வயது தாண்டிய ஒரு அம்மா குழந்தைக்குத் தொட்டில் கட்ட சேலை கொடுக்கிறாள். ஒரு நிறுத்தத்தில் இறங்கி டயாப்பர் வாங்கிவந்து தருகிறாள். இத்தோடு அவள் இன்னொரு வேலையும் செய்கிறாள். ரயிலில் இருந்தபடியே ரயில்வே துறை காவலருக்கு தகவலுக்கும் தெரிவிக்கிறாள், ஒரு பெண் ஒரு குழந்தையைத் திருடிக்கொண்டு திருப்பூர் நோக்கி வரும் ரயிலில் வருகிறாள் என்று.
ரயில்வே நிலையத்தில் மூன்று மணி நேரம் விசாரணை. விசாரணையில் என்ன நடந்ததென்று பேருந்தில் தனக்கு இடம் பிடித்துக் கொடுத்த சுதாவிடம் அந்த இளம் தாய் சொல்வதுதான் கதை.
காவலர்கள் எப்படியெல்லாம் விசாரிப்பார்கள் என்று நமது கற்பனைக்கு ஓர் எல்லை இருக்கிறது. அப்படியாகவே விசாரிக்கப்படுகிறாள். பால் கொடுக்க முடியாமைக்குக் காரணம் பால் வரலை என்று சொல்கிறாள். அவளை கழிப்பறைக்கு அழைத்துச்சென்று வயிற்றைப் பார்க்கிறார்கள். வயிற்றில் பிரவசத் தழும்பு இருக்கிறது.முகவரியை வாங்கிக்கொண்டு நாள் வீட்டுக்கு வந்து விசாரிப்போம். உன் புருசன் வீட்டில் இருக்கணும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்கள்.
இதையெல்லாம் சுதாவிடம் சொல்லி முடித்தவள் அலைபேசி வழியே அவளது கணவனிடம் விசாரணையின் போது குழந்தையை எங்கேயோ வைத்திருந்தார்கள் என்று சொல்லும் போது சுதா கண் கலங்குகிறாள். சுதாவிடம் அவள் சொல்கிறாள், "என் புள்ளையவே நான் வளர்க்க முடியல. இதுல நான் ஏன் இன்னொருத்தர் புள்ளைய எடுத்துட்டுவரப்போறேன் " என்கிற இடத்திற்கு கதை வருகிற பொழுது கதை சாதாரணமாகத்தான் இருந்தது.
இந்த இடத்திற்குப் பிறகு மேலும் கொஞ்சம் உரையாடலும் கடைசியில் ஒரு சிறு பத்தியும் இருந்தன. இதற்குள் என்ன பெரிதாக சொல்லப் போகிறார் என்று வாசித்தேன்.
சுதாவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே உரையாடல் நிகழ்கிறது.
" வீடு எங்கே இருக்கு?"
" அரசம்பாளையம்க்கா "
" இருட்டிருச்சே! உன் புருசன் ஏன் கூட்டிப்போக வரல?"
" அந்த நாய்க்கு பெட்ரோல் போடக் காசு இல்லையாம் "
" எப்படிப் போவ?"
"அப்படியே போக வேண்டியதுதான் " ஒரு ஆற்றைப் போல பதிலளித்தாள்.
இதற்கும் முன்பு வாசிக்காத உவமையாக இந்த இடம் இருந்தது. ஆற்றைப் போல பதிலளிப்பது.
பேருந்து நிறுத்தம் வந்ததும் கதையும் நிறைவு பகுதிக்கு வந்துவிட்டது.
பேருந்திலிருந்து இறங்கி முழங்கைக்குள் குழந்தையையும் மற்றொரு கையில் பையையும் போட்டுக்கொண்டு அந்த இருட்டில் நடந்து மறைகிறாள்.
கதையின் கடைசி பத்தி இப்படியாக முடிகிறது.
சுதா எச்சில் விழுங்கியபடி தனது கையிலிருந்த ஃபைலின் தலைப்பைத் தடவினாள். அதில் IVF என்று அச்சாகியிருந்தது.
இந்தக் கதை வாசிக்கும் வரைக்கும் எனக்கு IVF என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் இப்படியாக நினைத்தேன். ஒரு காவல்துறை பெண் அவள் கொண்டுவரும் குழந்தை அவளது குழந்தைதானா என்று கண்டுபிடிக்க மக்கள் உடையில் விசாரிக்கிறாள் என்று. இப்படியாக யோசிக்கையில் இந்தக் கதை சுமாரான கதையாக புலப்பட்டது. IVF என்றால் என்னவென்று தேடுகையில் செயற்கை கருத்தரிப்பு என்று தெரியவந்தது. இது தெரிந்த பிறகு இளம் வயது தாயும் குழந்தையும் அவள் காவலரிடம் எதிர்கொண்ட விசாரணையும் சட்டென கண்ணிலிருந்து மறைந்து அகக்கண்ணில் சுதா முழுவதாக நிறைந்தாள்.
இளம் தாய் பேருந்தை விட்டு இறங்கிச் சென்றதன் பிறகு சுதாவின் கவலை என்னவாக இருக்கும், என்று யோசித்தேன். சுதா, தான் பெற்றெடுக்கப்போகும் குழந்தைக்குத் தன்னால் பால் கொடுக்க முடியாது என்கிற கவலையில் அவள் மூழ்குவதாக எனக்குத் தோன்றியது. உங்களுக்கு வேறொரு விதமாகவும் தோன்றலாம்.
&&&&&&&&&&
சிறுகதை -04
பிரேம் டாவின்சி ஓவியத்துடன் வந்த சிறுகதை இடைவெளி. இடைவெளி எனும் தலைப்பில் ஒரு டால்பின் மீன் ஒரு பந்தில் விளையாடியது. ஒரு புலி சைக்கிள் ஓட்டியது. ஒரு யானை ஒரு பந்தின் மேல் நான்கு கால்களை நிறுத்தி நின்றது. ஒரு கோமாளி நாலைந்து வளையங்களைத் தூக்கிப்பிடித்து விளையாடினார். ஒரு சிங்கம் ஒரு வட்டப் பலகையின் மேல் ஏறி நின்றது. தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில் தலைகீழாகத் தொங்க, அவரது கைகளைப் பிடித்தபடி ஒருவர் தொங்கிக்கொண்டிருந்தார். ஒருவர் இரண்டு எடை குண்டுகளை தலைக்கு மேலாகத்தூக்கி நின்றார். இடைவெளி எனும் தலைப்பிற்குள் இவ்வளவும் வரையப்பட்டிருந்தது. செயற்கை நுண்ணறிவு இதுபோன்ற ஓவியங்களை சாத்தியப்படுத்துகிறது. தலைப்புக்கும் மேலே ஒரு துணியினலான கூடாரம். கூடாரத்தின்மேல் சிவப்பு கொடி பறந்தது.இப்படியான தலைப்பைப் பார்க்கும் யாருக்கும் இந்தக் கதை ஒரு சர்க்கஸ் என்றே நினைக்கத் தோன்றும். நானும் அப்படித்தான் நினைத்தே இக்கதையை வாசிக்கத் தொடங்கினேன்.
கதை ஒரு மாநகரில் தொடங்குகிறது. சரவணா ஸ்டோர்ஸ்க்கும் வெளியே சங்கர மூர்த்தி என்பவரை கதை சொல்லி பார்க்கிறார். ஆறாம் வகுப்பில் இருவரும் ஒன்றாக படித்தவர்கள். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறார். இருவருக்கும் இப்பொழுது திருமணம் வயது. கதைசொல்லிக்கு திருமணமாகிவிட்டது. சஃபோலா எண்ணை வாங்க கடைதெருவுக்கு வருகையில்தான் சங்கரமூர்த்தி எனும் நாயகனைப் பார்க்கிறான். அவ்வளவு நேரம் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருக்கும் அவர் இவரைப் பார்த்து விலகி சென்றுவிடுகிறார். இப்படியாக செல்வது ஒருமுறை இருமுறை அல்ல. பல முறை. இப்படியாக விலகிச்செல்வது புன்னகைக்க யத்தனம் செய்து தோற்றது போல் இருந்தது என்று கதையாசிரியர் எழுதுகிறார்.
இதற்கும் முன்பு ஒரு டீக்கடையில் பார்க்கிறார். சங்கரமூர்த்தி கதைசொல்லியை மரியாதை நிமித்தமாக கேட்கிறார். "எப்படி இருக்கிறீங்க?" பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் உவகையில் அப்படி கேட்கிறார். கதை சொல்லி , "நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே சங்கரமூர்த்தி?" என்று பதிலுக்குக் கேட்கிறார். இந்த ஒருமை விளிச்சொல் அவனைக் காயப்படுத்துகிறது. ஆயினும் இருவருக்கும் இடையில் உரையாடல் தொடர்கிறது. "அப்பா எப்படி இருக்கிறார்?" "ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போயிட்டார் " "அப்படியா சாரி, எப்படி?"
இந்தக் கேள்வி சங்கரமூர்த்தி முகத்தில் மாற்றத்தை விளைவிக்கிறது. அவர் "பேங்கில் பாஸ்புக்கை வெச்சிட்டு வந்திட்டேன் " என்று சொல்லிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்கிறார். இந்த விலகல் கதையாசிரியரை வதைக்கிறது.
இதற்கும் பின்னே ஒரு கதை இருக்கிறது. அப்போது அவர்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்கள். சங்கரமூர்த்தி அமைதியாக இருக்கிறவன். பள்ளியில் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் எழுப்பி என்ன தொழில் செய்கிறாரென கேட்கிறார். பலரும் வியாபாரம், ஆபிஸர்,... இப்படியாகச் சொல்கிறார்கள். சங்கரமூர்த்தி "சர்க்கஸில் பார் ஆடுகிறார் சார்" என்கிறான்.
எல்லாரும் சிரிக்கிறார்கள்.
ஆசிரியர் எல்லாரையும் கண்டித்து அமைதிப்படுத்திவிட்டு "எந்த சர்க்கஸில்?" என்று கேட்கிறார். " ஜெமினி " என்கிறான்.
கதைச்சொல்லிக்கு அவன் கொஞ்ச நாட்களுக்கு முன்பு பார்த்த நேஷனல் சர்க்கஸ் நினைவுக்கு வருகிறது. அம்மா, அப்பா, தங்கை, தம்பியுடன் சென்று பார்த்த சர்க்கஸ் அது. சிங்கத்திற்கும் புலிக்கும் இடையே சண்டை வருமா? சண்டை வந்தால் எது ஜெயிக்கும்? கேள்விகள் கேட்டுக்கொண்டே அவன் சர்க்கஸ் பார்க்கிறான். அந்த சர்க்கஸில் ஒருவர் பார் ஆடுகிறார். ஆடியபடி விழுந்துவிடுகிறார். வலையில் விழுந்து நூலேணியில் ஏறி மேலே செல்கிறார். இந்தக் காட்சியைப் பார்த்த அவன் சங்கரமூர்த்தி தன் அப்பா சர்க்கஸில் பார் ஆடுகிறார் என்று சொன்னதும் அவனிடம் விசாரிக்கிறார். இப்ப உங்க அப்பா எந்த ஊர்ல இருக்கிறார்? சிங்கத்தோடு சண்டை போடுவாரா? அவர் பார் ஆடி நீ பார்த்திருக்கிறாயா? எப்பவாவது கை தவறி விழுந்திருக்கிறாரா?
இப்படியாகக் கேட்டதும் அவனது புன்னகை மறந்து கோபமோ, எரிச்சலோ மேலிடுகிறது. அப்பொழுதே அவன் எழுதிக்கொண்டிருந்த நோட்டை மூடி பைக்குள் திணித்துக்கொண்டு அங்கேயிருந்து சென்று வேறொரு இடத்தில் அமர்ந்திக்கொள்கிறான்.
இவனைத்தான் பல ஆண்டுகள் கழித்து சரவணா ஸ்டோர்ஸ் அருகில் பார்க்கிறான். சிரித்து யாரிடமோ பேசிக்கொண்டிருப்பவன் இவரைப் பார்த்தும் விலகி சென்றுவிடுகிறான். இவருக்கு காலடித்தரை உள்வாங்குவதைப் போலிருக்கிறது.
இந்தக் கதையை எழுதியவர் ஜி.குப்புசாமி. இந்தப் பெயர் சிறுகதை பரப்பில் பரிச்சயமான பெயர்தான். இந்தக் கதை மென் உணர்வைப் பேசுகிறது. தனது தந்தையின் தொழிலை ஆசிரியர் கேட்க சர்க்கஸில் பார் ஆடுகிறார் என்று சொன்னதும் பலரும் சிரித்தது இவனை ரொம்பவே பாதித்துவிடுகிறது. அப்பா அவனைப் பொறுத்தவரை தொழிலால் பலரின் நகைப்புக்குரியவராக இருக்கிறார் என்பது அவனது இளவயதில் நன்றாக பதிந்துவிட, எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகும் அப்பா இறந்த பிற்பாடும் கூட அப்பாவைப் பற்றி அவனோடு வகுப்பில் படித்த ஒருவன் கேட்பதை அவன் விரும்பவில்லை. அவனை எதிர்கொண்டு பார்க்கவும் பிடிக்கவில்லை என்பதை பேசுகிறது இக்கதை.
இக்கதையை வாசித்ததும் எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒருமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தேன். பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பில் ஒன்றியம் அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா அது.
ஒரு மாணவிக்கு பரிசு வழங்கிய ஆட்சியர் அந்த மாணவியிடம் "உன் அப்பா என்ன செய்கிறார்?" என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி, " தப்படிக்கிறார் " என்றாள். இது ஆட்சியருக்குப் புரியவில்லை. " என்ன செய்கின்றார்?" என்று திரும்பவும் கேட்க, அந்த மாணவி அதையே சொல்லி, அவரது கீழ் பணியாற்றும் அலுவலர்கள் விளங்கினார்கள். " இது சாதித் தொழில் " என்று. ஆட்சியர் அண்டை மாநிலத்தவர் என்பதால் புரிந்தும் புரியாதவராய் அடுத்த மாணவிக்குப் பரிசைக் கொடுத்தார். ஜி.குப்புசாமி எழுதிய கதையில் அப்பாவின் தொழிலைச் செய்கையில் சிரிப்பு நிகழ்கிறது. அடுத்த கதையில் வியப்பு மேலிடுகிறது. சங்கரமூர்த்தி காலம் கடந்தும் அப்பாவை மறந்து அவரது தொழிலை மனதில் சுமந்து திரிய இந்தச் சிரிப்பே காரணமாக இருந்துவிடுகிறது. இந்தக் கதை 28.01.2026 நாளிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது.
4.2.2026 நாளிட்ட ஆனந்த விகடன் இதழில் ஆ. ஆனந்தன் பாரம் சுமப்பவர்கள் எனும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். கதைக்கு ஓவியம் அரஸ். ஆனந்த விகடன் ஓவியங்களில் அரஸ் ஓவியம் ஒரு ரகம். மனிதர்களை முழுமையாக வரைந்துவிடுகிறவர். இவரது ஓவியங்களில் மனிதர்கள் கூட்டமாக, குழுமிக் காணப்படுவார்கள். இவரது ஓவியம் ஒருவகையில் காணிக்கராஜின் ஓவியத்தை நினைவூட்டும். பாரம் சுமப்பவர்கள் எனும் தலைப்பில் சப்பரத்தைத் தாங்கும் இரண்டு முட்டுக்கால்களை வரைந்திருந்தார். தலைப்பை அந்த இரண்டு முட்டுக்கால்களும் சுமந்திருந்தது.
ஓவியத்தில் பத்து பேர் ஒரு சிலையைப் பல்லக்கில் வைத்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். பல்லக்கில் சாமியின் சிலைதான் இருந்ததே தவிர அருகில் அர்ச்சகரோ ஐயரோ இருந்திருக்கவில்லை. ஓவியத்தைப் பார்த்தவுடனே நினைத்தேன். இந்த ஓவியத்தின்படி கதையின் தலைப்பு பாரம் சுமப்பவர்கள் சரியாக பொருந்தாதே என்று. கதையை வாசித்தேன்.
கீழக்கோயிலின் உற்சவர் வீதி உலா என்பதாக கதை தொடங்கியது. கீழக்கோயில் என்பது சிவன் கோவில். ஆறு கால பூஜை தவறாது நடக்கும் கோயில். மாசாணம் உட்பட பத்து பேர் சிவிகை தூக்குகிறார்கள். கதையில் வரும் சிவிகையை பல்லக்கு என்று எழுதியிருக்கலாம். அந்தப் பத்து பேரில் மாசாணம் மிக நீண்ட காலமாக சிவிகை தூக்குகிறவன். சிவிகை தூக்காத நாட்களில் கோயிலுக்கு காவலிருப்பான். மாசாணம் நம்பிக்கைக்குரிய ஒருவனை இந்த வேலைக்கு அழைத்து வருகிறான், அவன் முத்தையா. சிவிகைத் தூக்கும்போது மாசாணமும் முத்தையாவும் ஒருவரையொருவர் பேசிக்கொண்டே சிவிகையைத் தூக்குவார்கள். அவர்களுக்கான ஊதியம் என்பது கோயில் அர்ச்சகர் தரும் பிரசாதம்.
ஒரு நாள் முத்தையா மாசாணத்துடன் சொல்கிறான், எனக்குள்ளே உள்ள ஒரு ரகசியம் என்னை என்னவோ செய்கிறது என்கிறான்.
" என்ன எதுவும் காதல் கதையா?"
"அதுன்னா நினைக்க நல்லா இருக்குமே. இது ஒரு மாதிரி கதை "
செல்லச்சொல்லி கேட்கிறான் மாசாணம்.
முத்தையா இருபது வயதுக்கதையைச் சொல்கிறான். அந்த வயதில் முத்தையா கர்லிங் முடி வெட்டிக்கொண்டு காதல் செய்து திரிகிறான். அப்பொழுது ஒரு பெண் மீது அவன் காதல் கொள்கின்றான். காதலைத் தெரிவிக்கிறான். அவள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் அதேநேரம் பிடித்திருக்கிறது என்று சொலலும்விதமாக டைப்ரைட்டிங் சென்டருக்குள் நுழைந்துவிடுகிறாள். அவளது வீட்டைத் தேடிப்பிடித்து பார்க்கிறான். அவள் குடும்பத்துடன் வேறொரு ஊருக்கு இடம் பெயர்ந்து தெரியவருகிறது.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அறுபது மைலுக்கும் அப்பால் அவள் கல்யாணம் முடிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அவளிடம் சென்று உரையாடுகிறான். எனக்கும் உன் மேலே கொஞ்சம் ஆசை இருக்குது என்கிறாள் அவள். ஓரிடத்தில் பல நாட்கள் தங்கியிருந்து அவள் படித்துறையில் குளித்து திரும்புகையில் மறித்து உரையாடுகிறான். தனியே அமர்ந்து பேசுகிறான். இது அவளது கணவருக்குத் தெரிந்துவிடுகிறது. அவளை அடித்து துவைக்கிறான். தொடர்ந்து அவன் சந்தேகத்தில் அடிக்க ஒரு நாள் அவள் தற்கொலை செய்துகொள்கிறாள்.
இந்த சம்பவத்தைச் சொல்லி தேம்பி அழுகிறான் முத்தையா. அவனது நீண்ட நாள் ரகசியத்தை எப்படியே வெளியே எடுத்த இந்த இரவு வடிகால் இரவாக இருப்பதை நினைத்து ஆசுவாசம் கொள்கிறான் மாசாணம்.
இதுதான் கதை. இந்தக் கதை நன்றாக இருக்கிறது இல்லை என்பதைத் தாண்டி இந்தக் கதைக்கு பாரம் சுமப்பவர்கள் எனும் தலைப்பு வேண்டியதில்லை. தேரை இழுத்து நடுவீதியில் விட்ட கதையைப் போல சிவிகையை தூக்கி பாதியிலேயே விட்டுச் சென்றிருக்கிறார் ஆ. ஆனந்தன்.
இந்தக் கதையை இப்படியாக முடித்திருந்தால் ஒருவேளை கதை முழுமைப்பெற்றிருக்குமோ என்று நினைக்கத்தோன்றியது. எப்படியென்றால், முத்தையா விரும்பி தற்கொலை செய்துகொண்டால் அல்லவா ஒரு பெண் அவள் மாசாணத்தின் மனைவி. இது எப்படியிருக்கு!
ஆகாஷ்க்கு 55 வயது என்பதாக கதை தொடங்குகிறது. இவர் குப்பைகளை அள்ளும் துப்பரவு பணியாளர். இவர் ஒரு வீட்டில் அவ்வப்போது டாய்லட் சுத்தம் செய்யவும் பெருக்கவுமாக இருக்கிறார். அந்த வீட்டுப் பையன் கதிர். கதிரின் மனைவி கோதி. இந்த மூவரைச் சுற்றி கதை நகர்கிறது.
கதிர் முகச்சவரம் செய்துகொள்ள சலூன் கடைக்குச் செல்கிறான். அது 'அ ' வகை. சிகை திருத்தம் செய்ய எவ்வளவு வாங்கப்படும் என்று பட்டியல் படுத்தியிருக்கும் அறிவிப்பை விடவும் குறைவாக வாங்கும் கடை இது. அந்தக் கடையில் ஆளில்லை என்றாலும் கதிர் இதைவிடவும் வேறொரு கடையை நாடுகிறான். இந்த ஆ வகை நடையையொட்டி ஆகாஷ் குப்பைத் தொட்டியில் குப்பையைப் போடுகிறான். அவரைப் பார்த்தும் அவருக்கும் கதிருக்குமான நட்பு நினைவுக்கு வருகிறது. அந்த முதிய வயதிலும் ஆகாஷ் மரம் ஏறுவதும் ஏணி இல்லாமல் கூரை ஏறி சுத்தம் செய்வதுமாக இருக்கிறார். அவருக்கு பழைய ஆடைகளைக் கொடுக்கிறாள் கோமதி. ஆகாஷ் நன்றி முகம் காட்டாமல் வாங்கிச்செல்கிறார். துப்புரவாளர் என்றால் பழையத் துணிக்குத்தான் லாய்க்கு போலும்...என்கிற கோபம் ஆகாஷுக்கு.
இந்தக் கடையில் இரண்டு சுழலும் நாற்காலிகள். நான்கைந்து பேர் காத்திருக்கிறார்கள். கதிர் அடுத்தக் கடை செல்கிறான்.
இந்த இ வகை கடையில் செருப்பை வெளியே விட்டுச்செல்ல வேண்டும். இங்கும் கூட்டமாக இருக்கிறது. அடுத்து வேறொரு கடைக்குச் செல்கிறான். இந்த ஈ வகை கடையில் பெண்கள் முடி திருத்துகிறார்கள். காத்திருக்க வேண்டியிருக்கிறது. கூலி அதிகம். தூரத்தில் ஒரு குப்பை வண்டி நிற்கிறது. அதைப் படம் பிடிக்கிறான். "குப்பைகளை நாம்தான் உருவாக்குகிறோம். ஆனால் அவை தன்னால் உருவாவது போல நடந்துகொள்கிறோம் " சோஷியல் மீடியாவில் எழுத யோசிக்கிறான். கடையை நடத்தும் பெண் நாளை வரச்சொல்லி அனுப்புகிறாள். கதிர் திரும்பவும் அந்த வகை கடைக்கு வருகிறான். அந்தக் கடையில் ஒருவர் அமர்ந்து சவரம் முடிந்து எழுந்திருக்கிறார். அது ஆகாஷ். ஆகாஷ் எழுந்ததும் அந்த நாற்காலியில் கதிர் அமர்கிறான். "இங்கேயும் நீங்க வந்துட்டீங்கன்னா, நாங்க எங்கய்யா போறது?" என்று கதிர் முணுமுணுப்பதை ஆகாஷ் காதில் வாங்கிக்கொள்ளாமல் நகர்கிறார். அந்தக் கடைக்காரர் கதிர் முகத்திலிருந்து குப்பைகள் அகற்றுகிறார்.
இந்தக் கதையை முதலில் வாசிக்கையில் குப்பை அள்ளும் ஆகாஷ் பெண்கள் நடத்தும் கடையில் சவரம் செய்துகொள்வதாக நினைத்தேன். அப்படியான கதையின் போக்கு எனக்கு வியப்பைக் கொடுத்தது. ஒரு துப்பரவாளர் உயர்ந்த மேட்டுமையான வசதி படைத்தவர்கள் செய்துகொள்ளும் கடையில் சவரம் செய்கிறாரா என்று. கதையை மறுமுறை வாசிக்கையில் துப்புரவாளரின் வாழ்க்கைத்தரம் அந்தளவிற்கு உயர்ந்துவிடவில்லை என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. குப்பை தொட்டி குறித்தும் குப்பைகளை அள்ளும் துப்புரவாளர்கள் குறித்தும் முற்போக்கோடு சோஷியல் மீடியாவில் பதிவிட விரும்பும் கதிர் நிஜத்தில் நேரில் ஒரு துப்புரவாளர் இப்படியான கடைக்கு வருவதை விரும்பாத மனநிலையை இக்கதை ரொம்பவும் கூர்மையாக பேசியிருந்தது.
வில்லுப்பாட்டு பாடுகிறவர் லோகம்மாள். இந்தப் பாட்டு அவரது தந்தையார் நைனா ரங்கமணி மூலமாக கற்றுக்கொண்டவர். நல்ல குரல்வளம். அடுக்கடுக்கான நிறைய கதைகள். அவரது தந்தையின் கீழ் உடுக்கை வாசிக்கிற கோவிந்தனுக்கு மகளைத் திருமணம் செய்துகொடுக்கிறார் ரங்கமணி. இருவரும் ஒரு காலத்தில் அடுத்தடுத்து இறந்துவிடுகிறார்கள். இதன் பிறகு லோகம்மாள் வாழ்க்கை என்னாகிறது என்பதே கதை.
கால ஓட்டத்தில் லோகம்மாதான் கிழவியாகி லோகு ஆயிடுச்சு என்று சிறுகதையாளர் எழுதியதைக் கொண்டே லோகும் அவளது தொழில் வில்லுப்பாட்டும் என்னாகியிருக்கிறது என்பதைக் காட்டிவிடுகிறது. ஊருல எல்லாத்துக்கும் கரண்ட் என்கிற உசிர் வேணும்ல என்கிற வரியாகட்டும், காலம் இருக்கே அது ஒரு அட்டுப் புடிச்ச மூதேவியுலும் கெட்டுப்போன சனியன். ஆட்டுப் புழுக்கையை கூட சும்மா விடாது என்கிற இடமாகட்டும் வட்டார மொழிகள் குந்தி பேசுகின்றன.
லோகு ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு திண்ணையில் குந்தி விடுகிறாள். எல்லாரும் அவளது திண்ணைக்கு வந்து பாட்டுக்கேட்டு முறுக்கு, மிட்டாய் என்று வாங்கித்தின்னுகிறார்கள். பள்ளிக்குழந்தைகள் சிலேட்டு, பல்பம் என்று வாங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் ஊருக்குள் அவளது வீட்டையொட்டி பஞ்சாயத்து டீவி வந்துவிடுகிறது.இந்த டீவியை நிர்வகிப்பவர் அந்த ஊர் தலையாரி. இதன்பிறகு ஊர் மக்கள் அந்தப் பஞ்சாயத்து டீவியிலேயே மூழ்கியிருக்கிறார்கள். இவளது பக்கம் யாரும் தலை வைத்து படுப்பதாக இல்லை.
வாழ்க்கையின் ஏமாற்றத்திற்கு சென்றுவிடுகிறாள் லோகு. எதைப் பத்தியும் கவலைப் படுவதில்லை. வந்த மாட்டை கட்டுறதுமில்லை. போன மாட்டைத் தேடுறதுமில்லை. அவரது திண்ணையைத் தேடி வரும் ராஜமாணிக்கம் வாத்தியார் கூட அவளைத் தேடி வரவில்லை.
ஒரு நாள் ஊர் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லாரும் பலாப்பழத்தின் மீது ஈ மொய்ப்பதைப் போல மொய்த்துப்பார்க்கிறார்கள். அதன்முன்பு தோன்றி அவளது வில்லுப்பாட்டு கலையை நிகழ்த்துகிறாள். மண் வாரி இறைக்கிறாள். இரைச்சல் கொடுக்கிறாள். எல்லாரும் தெறித்து நாலாபுறமும் ஓடுகிறார்கள்.
அவள் ஒரு சிங்கத்தின் கதையைச் சொல்கிறாள். ஒரு நரி அந்தச் சிங்கத்தை உன்னைப் போலவே ஒரு சிங்கம் இருக்கிறதென்று சொல்லி அந்தச் சிங்கதத்தை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் செல்கிறாள். அந்தச் சிங்கம் அந்த கிணற்றுக்குள் பாய்கிறது.
காலையில் மக்கள் தண்ணீர் எடுக்க ஊர் கிணற்றுக்குப் போகிறார்கள். லோகு கிணற்றுக்குள் செத்து மிதக்கிறாள்.
பேப்பர் குருவி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது இரண்டாம் உலகப்போர் காலத்திய ஜப்பானில் அணுகுண்டால் பாதிக்கப்பட்ட சிறுமி தான் இறப்பதற்கு முன்னதாக செய்த காகிதக்கருவிகள். இக்கதையை வாசிப்பதற்கு முன்பு என் நினைவிற்கு வந்தது இந்தச் சம்பவமதான்.
கதையை வாசித்தேன்.தேவராஜ் எனும் பாத்திரம் வழியே கதை சொல்லப்படுகிறது. அவனது பெட்டிக்குள் பேப்பர்குருவிகள் இருக்கின்றன. அந்த எடுத்துப் பார்க்கிறான். அதற்குள் ஒரு கதை இருக்கிறது.
தேவராஜின் அண்ணன் ராமலிங்கம், விஜயன், கலியன்,..இப்படியான இளஞ்சிட்டு பையன்கள் விளையாட்டுப் பருவத்தில் உண்டிகோல் (காக்கா பெல்ட்) கொண்டு குருவிகளை அடித்து விளையாடுகிறார்கள். நீண்ட பனங்காடு, அதையொட்டி ரயில்வே இதற்குள் அவர்கள் குறி பார்த்து குருவியை அடித்து கொன்று விளையாடுகிறார்கள். செம்போத்து, இருவாச்சி, புல்புல், சிட்டுக்குருவி இப்படியான பறவைகள் இவர்களின் குறிக்கு இரையாகின்றன. இந்தப் பறவை அடித்து கொன்று சுட்டும் சமைத்தும் சாப்பிடுகிறார்கள். தேவராஜ் இது தவறென்றும் பிழையென்றும் உணர்கிறான்.
ஒரு நாள் ராமலிங்கம் பனம் பழம் பறிக்க மரத்தில் ஏறி தவறி கீழே விழுந்துவிடுகிறான். அவன் விஜயன்மீது விழுந்துவிட அவனுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. இருவரையும் ரயில்வே ஆஸ்பத்திரி கொண்டுபோய் சேர்த்து காப்பாற்றுகிறார்கள். ராமலிங்கத்திற்கு உடல் பாதிக்கும் கீழ் செயல்பாடு இழக்கிறது. விஜயன் நினைவுகளை இழக்கிறான். விஜயன் அவ்வப்போது குருவிகள் சாவதைப் போலவும் ராமலிங்கம் விழுந்துவிட்டதைப் போலவும் கத்துகிறான்.
பிறகு இவர்கள் இருவரும் இருவேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறார்கள். விஜயன் குற்ற உணர்வில் மெல்ல நடந்து ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து இறந்துவிடுகிறான். ராமலிங்கத்திற்கு தேவராஜ் துணையாகிறான். ராமலிங்கம் தினமும் பேப்பக்குருவி செய்து தம்பிக்கு தேவராஜிடம் கொடுக்கிறான். தேவராஜ் ஒன்றும் புரியாமல் பார்க்கிறான். "இந்தக் குருவி வெளியில் பறக்காது ஆனால் இதயத்திற்குள் பறக்கும். இப்படியாக குருவிகள் செய்வதுதான் நம் பாவத்தின் பரிகாரம் " என்கிறான். தேவராஜ்க்கு மாற்றம் ஏற்படுகிறது.
மண்ணில் ஒரு வகை கரம்பை. எனது ஊருக்கும் அருகில் கரம்பக்குடி என்றோர் ஊர் உள்ளது. கரம்பை மண் வகை ஊர் அது. அந்த மண் எப்படி இருக்குமென்றால் கரிசலும் வண்டலும் கலந்த மண். பெரிதாக எதுவும் விளைந்துவிடாது. இந்த மண்ணை ஆதாரமாகக் கொண்ட கதை வேட்டல் நிலம்.
செங்கான் அவருடைய மகன் மருதமுத்து, மனைவி இருளாயி, மருமகள் வேணி, மகள் வடிவு இவர்களைக் கொண்டு ஒரு குடும்பக் கதைதாகவும் மண்ணை மீட்டெடுக்கும் கதையாகவும் கதை நகர்கிறது.
செங்கான் ஓர் ஆண்டையிடம் கொத்தடிமையாக வேலை பார்க்கிறார். அவர் பாவப்பட்டு கரம்பக்காட்டை எழுதி வைத்து செத்துப் போகிறார். இந்த நிலத்தில் ஒரு கிணறு வெட்டி பாடுபட்டு வயிற்றைக் கழுவுகிறார்கள். செங்கான் நோயில் படுத்துவிட அந்த கரம்பக்காட்டை அடமானம் வைத்து வைத்தியம் பார்க்கிறான் மகன் மருதமுத்து. ஒரு நாள் அப்பனும் இறந்துவிடுகிறார்.
நிலத்தில் விளைந்து சேமித்து வைத்திருக்கும் திணையை இருளாயி மருமகள் வேணிக்குத் தெரியாமல் மகள் வடிவுக்கு அள்ளி கொடுத்துவிடுகிறாள். இதனால் மாமியார் மருமகள் சண்டை வருகிறது. இந்த சண்டை அண்ணி நாத்தனார் சண்டையாக மாறுகிறது.
என் அப்பன் சம்பாதித்தத திங்கிறதுக்கு யாருக்கிட்ட கேட்கணும் என்று நாத்தனார் பேசுவதும், உங்கப்பன் பக்கவாதம் வந்து வைத்திய செலவு பாத்து பாத்துதான் எம்புருசன் ஒன்னுமில்லாத ஓட்டாண்டியா போயிட்டான் என்று பதிலடி பேசுவதும் கதைக்குள் நிகழ்கிறது.
அடமானம் வைத்த நிலத்தை மீட்டாக வேண்டிய காலக்கெடுவுக்கு வந்துவிடுகிறது. நிலத்தை அடமானம் பிடித்தவர் வட்டியோடு பணம் கேட்கிறார். இல்லை நிலத்தை எழுதி கேட்கிறார். பணத்துக்காக ஓடி அலைகிறார் மருதமுத்து. நாளைக்கு கடைசி தேதி. பணம் கொடுத்து நிலத்தை மீட்க வேண்டும். இல்லையேல் நிலத்தை கைகழுவி விடவேணும். என்ன செய்யப் போகிறான் மருதமுத்து?
கதையை இப்படியாக முடிக்கிறார். முருதமுத்துக்கு இரண்டே வழிதான் இருக்கு. ஒண்ணு கதையை படிச்சிக்கிட்டு இருக்கிற உங்கள்ல யாரோ ஒருத்தர் மருதமுத்துக்கு கடன் கொடுத்து உதவணும். இல்லை, இன்றைய பொழுது இறங்காமலும் நாளைய பொழுது விடியாமலும் இருக்க வேண்டும்.
இக்கதை செம்பை மணவாளன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக